கனிமொழி: `10 வருஷத்துக்கு முன்னாடி இருந்தவங்கள கேட்டிருக்கணும்’ - மீனவர் தினவிழாவில் வாக்குவாதம் https://ift.tt/zbV0eCY

கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மீனவர் கிராமத்தில் உலக மீனவர்தினவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், தி.மு.க மகளிரணி மாநில தலைவி ஹெலன் டேவிட்சன், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் கனிமொழி எம்.பி பேசுகையில், "மீனவர்களின் துயரங்களை ஏற்றுக்கொள்ளாமல், கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடாமல், மதிக்க வேண்டிய மீனவர்களுக்கு உரிய மரியாதை தராமால், பாகுபாடு காட்டி ஒதுக்கிவைக்கும் சூழலை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உலகம் சந்திக்கும் சவால்களில் ஒன்று சூழலியல் மாற்றம். சூழலியல் மாற்றத்தால் பனிபிரதேசத்தில் பனி உருகி கடல்மட்டம் உயரும் நிலை உள்ளது. கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு, கடல் தாய் போன்றது. அதில் எது என்னுடைய தாய் என்பது இல்லை. தாய் எல்லோருக்கும் சொந்தம். தாயில் பிரிவினை இல்லை. இது உன்னுடைய எல்லை, இது என்னுடைய எல்லை எனக்கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களிடமிருந்து படகுகள் பிடுங்கப்படுவதும் நடக்கிறது.

உலக மீனவர்தினவிழாவில் பேசிய கனிமொழி

நம் மூதாதையர்கள் கடல் எனக்குச் சொந்தம் என கடல் கடந்து வாணிபம் செய்தார்கள். தமிழர்கள் கடல்கடந்து சென்று கடல் எல்லையற்றது என்று கடலில் மீன் பிடித்தார்கள். ஆனால், இப்போது கடலில் எல்லைகள் வகுக்கப்பட்டு, பிரிவினை ஏற்படுத்தியதால் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களுக்கும் மத்தியில் இருக்கும் அரசாங்கம் எந்தவித பதிலையும் சொல்ல தயாராக இல்லை. தீர்வு காணவும் அவர்கள் தயாராக இல்லை. கடலரிப்பு பிரச்னை, மீனவர்கள் பாதிக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை. மீனவர்களின் படகுகள் பிடித்து வைக்கப்படுவதில் அக்கறை இல்லை. ஆனால் அரசியல் செய்வதிலும், மக்களை பிரித்தாளுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மக்களுக்கு இடையே சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரச்னைகளை உருவாக்குவது, அவர்களிடம் காழ்ப்புணர்ச்சி உருவாகி, ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்ளக்கூடிய சூழலை எல்லா இடங்களிலும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஓரிடத்தில் மதக்கலவரமோ, சாதி கலவரமோ, இனக்கலவரமோ வரும்போது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது அங்கே இருக்கக்கூடிய பெண்களும் குழந்தைகளும்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிரித்தாளுபவர்களின் வலையில் விழுந்தால், எதிர்காலமே இருண்டுபோகும் நிலை ஏற்படும். இந்த செய்தியை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எந்த மதமாச்சரியங்களும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இந்த விழாவை கொண்டாடுகிறோம். இது தொடர வேண்டும்.

நாம் தமிழர்களாக, மனிதர்களாக ஒன்றுப்பட்டு வாழும் சூழ்நிலை தொடர வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக மத்திய அரசுக்கு கலைஞர் முதல்வராக இருக்கும்போத கடிதம் எழுதியிருக்கிறார். நானும் நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசியிருக்கிறேன். சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சொல்லியிருக்கிறீர்கள்.

விழாவில் கலந்துகொண்ட பெண்கள்

சட்டசபையில் நிறைவேற்றக்கூடிய சட்டங்களை கவர்னர் வைத்துக்கொண்டே இருக்கும் உரிமை அவருக்கு கிடையாது என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இதற்கு முன்னால் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருந்தால் அதையும் வைத்துக்கொண்டிருப்பார். இனிமேல் வைத்துக்கொண்டு தூங்க முடியாது. அதை கையெழுத்துப்போட்டு திருப்பி அனுப்ப வேண்டும். அதனால், உங்கள் கோரிக்கைகளை நிச்சயமாக முதல்வர் நிறைவேற்றி தருவார்கள். ஏனென்றால் மீனவர்களுக்கு என தனியாக மாநாடு நடத்தியவர் நமது முதலமைச்சர்தான். அந்த மாநாட்டில் நீண்டகாலமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்ததும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான்.

கடந்த ஆட்சியில் 10 வருஷமாக மீனவர்கள் வீடு கட்டினால் பட்டா வழங்கப்படவில்லை. ஸ்டாலின் ஆட்சிபொறுப்புக்கு வந்த பிறகு, நீங்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இப்போது தொடர்ந்து பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. மீனவமக்களுடைய உரிமையான இடத்துக்கு அவர்கள் உரிமைக்கொண்டாடக்கூடிய வகையில் பட்டாக்கள் வழங்கப்படுகிறது" இவ்வாறு கனிமொழி பேசியதும் கூட்டத்தில் இருந்த சில பெண்கள் "கோடிமுனையைச் சேர்ந்த எங்களுக்கு பட்டா கிடைக்கவில்லை" என சத்தம் போட்டனர். "உங்களுக்கு வரலியா, ஒரு மனு கொடுங்க நான் நிச்சயமா பட்டாவாங்கி தருவதற்கு ஏற்பாடு செய்கிறோன்" என்றார்.

தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி

அதற்கு அந்த பெண்கள், "15 வருஷமாக பட்டா வழங்கவில்லை" என்றதற்கு "அதை பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்தவங்களை நீங்க கேட்டிருக்கணும்" என்றார். ஆனாலும் மீனவ பெண்கள் விடாமல் பட்டா வழங்கவேண்டும் என வாக்குவாதத்தை தொடர்ந்தனர். பின்னர் அவர்களை சிலர் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து பேசிய கனிமொழி, "நாங்க 15 வருஷமா ஆட்சிபொறுப்பில் இல்லை. ஆட்சிபொறுப்பில் இருந்தர்களிடம் கேக்விகேட்டிருக்க வேண்டும். நீங்கள் கேட்கல. இப்போது நாங்கள் வந்திருக்கிறோம். அதை முதல்வரிடம் கொடுக்கிறேன்.  அவர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவார். இங்கு, மீன்பிடி இறங்குதளம் வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பல கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற ஆணை பிறப்பித்திருக்கிறார். நிச்சயம் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது, மேடையில் இருக்கும் நண்பர்களின் உதவியோடு பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்ப்பதை நிச்சயமாக செய்யமுடியும்" என சுருக்கமாக பேசி முடித்தார். பின்னர் பெண்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Tamilnadu News

About Shabbir Ahmad :

Lorem ipsum dolor sit amet, pericula qualisque consequat ut qui, nam tollit equidem commune eu. Vel idque gloriatur ea, cibo eripuit ex.
View All Posts By Shabbir !

0 Comments:

All Rights Reserved. 2014 Copyright PICKER

Powered By Blogger | Published By Gooyaabi Templates Designed By : BloggerMotion

Top