மும்பை தாராவியில் உள்ள குடிசைகளை இடித்துவிட்டு அதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் இருந்த இத்திட்டம் இப்போது விரைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு டெண்டர் விட்டு இருந்தது. இதில் அதானி நிறுவனம் வெற்றி பெற்று பணியை பெற்றுள்ளது. தாராவியில் வசிக்கும் தகுதியான குடிசைவாசிகளுக்கு 360 சதுர அடியில் இலவச வீடுகள் தாராவியேயே கொடுக்கப்படும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்காக தாராவியில் உள்ள குடிசைகள் மீண்டும் கணக்கெடுக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட இருக்கிறது. தாராவியில் ஆயிரக்கணக்கான குடிசைகள் இலவச வீடு பெற தகுதியற்றதாக இருக்கிறது.

அது போன்ற குடிசைவாசிகளுக்கு வாடகை வீடு திட்டத்தின் கீழ் மும்பைக்கு வெளியில் வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலவச வீடு பெற தகுதியில்லாத குடிசைவாசிகளுக்கு அதானி நிறுவனம் வீடு கொடுக்கும். ஆனால் அதற்கான கட்டுமானச் செலவை குடிசைவாசிகள் கொடுக்கவேண்டும். அவர்களுக்காக புதிய தாராவி உருவாக்கப்பட இருக்கிறது. மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியில் இருக்கும் முலுண்ட் பகுதியில் இந்த புதிய தாராவி உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால் தாராவி மக்களை முலுண்டிற்கு மாற்ற அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தாராவி மக்களை முலுண்ட் கொண்டு வந்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிழக்கு புறநகரில் காஞ்சூர்மார்க் பகுதியில் இருக்கும் உப்பள நிலம் 200 ஏக்கர், முலுண்ட் பகுதியில் உள்ள உப்பள நிலம் 58 ஏக்கர் மற்றும் வடாலாவில் உள்ள 28 ஏக்கர் உப்பள நிலத்தில் தாராவி மக்களுக்கு வீடு கட்டப்பட இருக்கிறது. இது தொடர்பான திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. உப்பள நிலத்தின் பெரும்பகுதி மத்திய அரசுக்கு சொந்தமானது ஆகும்.
எனவே இந்த நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வழக்கமாக 30 ஆண்டுகளுக்குத்தான் நிலம் குத்தகைக்கு கொடுப்பது வழக்கம். ஆனால் மத்திய அரசிடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கும்படி கேட்டுள்ளது. அந்த நிலத்தை தாராவி குடிசை புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்தும் அதானி நிறுவனம் விலை கொடுத்து வாங்க வாங்க வேண்டும். முலுண்ட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 46 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை தாராவி திட்டத்திற்கு மாற்றிக்கொடுக்கும்படி மாநில அரசு மாநகராட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

முலுண்ட் ஆக்ராய் நாக்கா பகுதியிலும் 18 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதனையும் தாராவி திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள மாநில அரசு முடிவு செய்துள்ளது. தாராவியில் 3 லட்சம் குடிசைகள் இலவச வீடு பெற தகுதியற்றதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தாராவியில் இருந்து வேறு இடத்திற்கு குறிப்பாக உப்பள நிலத்திற்கு மாற்ற அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே தாராவி அருகில் உள்ள ரயில் நிலத்தில் தற்காலிக குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது. அதேசமயம் அதானி நிறுவனத்திற்கு மாநில அரசு பல்வேறு சலுகைகள் வழங்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Tamilnadu News
0 Comments: