Vijay: `TVK-ன் Target 2026' - விஜய் கட்சிக்கு எப்படி இருக்கப் போகிறது தேர்தல் களம்?! https://ift.tt/A4BsJhO

புதிய கட்சி தொடக்கம்!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் `தமிழக வெற்றி கழகம்' என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்ததுதான் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. நீண்ட வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார்... வருவார் என்று பலராலும் சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரடி அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார் விஜய். நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழக அரசியலில் புதிய விஷயம் கிடையாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடங்கிப் பல திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் தங்களின் திரை `பிரபலத்தை' வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.

Vijay - விஜய்

அதேசமயத்தில், அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே சினிமாவில் நுழைந்து படங்கள் நடித்து அரசியலுக்குள் வந்தவர்களும் இங்கு உண்டு. சினிமாவிலிருந்து வருபவர்கள் அனைவருமே தமிழக அரசியலில் சாதித்தது இல்லை என்பதை நாம் பலநேரங்களில் பார்த்திருக்கிறோம். புதிய கட்சி தொடங்கியிருக்கும் விஜய், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என்று சொல்லி... 2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து அரசியலில் களமிறங்கியிருக்கிறார். விஜய்யின் அரசியல் வருகை, தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?!

யாருக்குப் பாதிப்பு?

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் தமிழகத்தின் அரசியல் களத்தில் யாருக்குப் பாதிப்பு என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். "தமிழ் திரைத்துறையைப் பொறுத்தவரை விஜய் ஓர் உச்ச நட்சத்திரம். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த பட்டாளத்தில் சாதி, மத, மொழி, கட்சிப் பேதமின்றி அனைவரும் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஒரு ரசிகர் என்பவர் வேறு... அதுவே தேர்தல் அரசியல் என்பது வேறு. ரசிகனாக இருப்பவர் அந்த நடிகருக்கே வாக்களிப்பார் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அதற்கு சிவாஜி தொடங்கி கமல் வரை உதாரணம் காட்டலாம்.

ஸ்டாலின் - எடப்பாடி

அதே சமயத்தில் கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரண்டு பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாத ஒரு காலகட்டம் இது. அந்த இருவரையும் தாண்டி, இப்போது மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரை இரண்டு பெரும் கட்சிகளைச் சார்ந்தவர்களும் தங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டார்கள். தி.மு.க-வில் தலைமையைப் பொறுத்தவரை எந்த குழப்பமும் இல்லை. முதல்வர் ஸ்டாலினுக்குப் பிறகு யார் என்பதுவரை ஏறத்தாழ இப்போதே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அ.தி.மு-கவின் நிலை அப்படி இல்லை. எடப்பாடி இப்போதுதான் இரட்டைத் தலைமை என்ற நிலையை மாற்றி, ஒற்றைத் தலைமை என்ற நிலையை எட்டி பிடித்திருக்கிறார்.

இருந்தபோதிலும் இன்னும் அ.தி.மு.க-வில் சில உட்கட்சிப்பூசல்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. சகிலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி., என்று அ.தி.மு.க-வுக்கு உரிமை கோருபவர்களும் இருக்கிறார்கள். அதற்காக அ.தி.மு.க-வின் இடத்தை விஜய் நிரப்புவார் என்று சொல்லிவிட முடியாது. காரணம், எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை மனிதர் ஏற்படுத்திச் சென்ற அடித்தளம் அவ்வளவு உறுதியானது. அந்த அடித்தளத்தை ஜெயலலிதா என்ற அரசியல் ஆளுமை இன்னும் உறுதிப்படுத்திச் சென்றிருக்கிறார். அவ்வளவு எளிதில் அந்த அடித்தளத்தை யாராலும் ஆட்டம் காண வைத்துவிட முடியாது. இருந்தபோதிலும், அ.தி.மு.க-வின் மிகச் சொற்பனமான வாக்குகளை விஜய் பிரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

விஜய், சீமான்

பிரதான கட்சிகளைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட வாக்குவங்கியை வைத்திருக்கும் கட்சிகளில் நாம் தமிழர் கட்சியும் முக்கியமான ஒரு கட்சி. அந்தக் கட்சியின் முக்கிய பலமே இளைஞர்கள் பட்டாளம்தான். தற்போது விஜய் கட்சி, நாம் தமிழர்களின் வாக்குவங்கியைப் பாதிக்கக்கூடும். இதேபோல, தி.மு.க தொடங்கி உதிரி கட்சிகள் வரை உறுதி நிலையில் இல்லாதவர்களில் ஒரு சிலரின் வாக்குகளும் விஜய்க்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மற்ற அனைத்தையும் தாண்டி, விஜய் கட்சிக்கு இன்னும் அடிப்படை கட்டமைப்பே கிடையாது. அதனை அவர் மிகவும் வலுவாக உருவாக்கினால் மட்டுமே, அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஆதரவாளர்கள், அந்தக் கட்சியின் வாக்காளர்களாக மாறுவார்கள். அதற்கு விஜய் பயணிக்க வேண்டிய தூரம் மிக அதிகம்" என்றார்கள் விரிவாக.

அடுத்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. அதற்குள் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்!


from Tamilnadu News

About Shabbir Ahmad :

Lorem ipsum dolor sit amet, pericula qualisque consequat ut qui, nam tollit equidem commune eu. Vel idque gloriatur ea, cibo eripuit ex.
View All Posts By Shabbir !

0 Comments:

All Rights Reserved. 2014 Copyright PICKER

Powered By Blogger | Published By Gooyaabi Templates Designed By : BloggerMotion

Top